சென்னை:
சகோதரி வைஷ்ணவி, உண்மையிலேயே மக்கள் பணியாற்ற வேண்டுமென்று நினைத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாம் என வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. பட்டதாரியான இளம் பெண்ணான இவர் இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த போது, விஜய் ரசிகையான தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுதி வரும் வைஷ்ணவியை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தவெக வில் இளம் பெண்கள் ஓரம்கட்டப்படுவதாகவும், பெண்களே அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொள்வதாக கூறி, தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “சகோதரி வைஷ்ணவி, உண்மையிலேயே மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம்.
இங்கு எல்லா வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் பிரதமர் மோடி சொல்கிறார்” எனக் கூறியுள்ளார்.