முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் , உதவியா ளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

முதுமலை:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஊட்டிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேற்று வந்தார்.

கல்லட்டி மலைப் பாதை வழியாக வந்த அவருக்கு, மாவனல்லா பகுதியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழியில் காரிலிருந்து இறங்கிய முதல்வர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுடன் கை குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதேபோல, மசினகுடியிலும் திரளான பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து முகாமுக்கு நடந்தே வந்து, முதுமலை குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5. கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை திறந்துவைத்தார்.

மேலும், மலைப் பகுதிகளில் எளிதாக செல்லும் வகையில் 30 ஜீப்புகளை தமிழக வனத் துறையினருக்கு முதல்வர் வழங்கினார்.

அதேபோல, மின் கம்பிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கொத்து மின்கம்பிகள் பதிக்கும் பணியை முதல்வர் தொடங்கிவைத்தார். பின்னர், முதுமலை யானைகள் முகாமுக்கு வந்து, யானைகளுக்கு வழங்கப்படும உணவுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு கரும்புகள் வழங்கினார். அதேபோல, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் குட்டி யானைகளுக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்தார்.

அதன் பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன், பெள்ளி உட்பட பழங்குடி மக்களுக்கு முதல்வரின் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. பின்னர் பழங்குடி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “முதுமலை புலிகள் காப்பகம் ரம்மியமாக இருக்கிறது. பழங்குடி மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள்ச் செயல்படுத்தி வருகிறோம் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்’ என்றார்.

அப்போது, அடிக்கடி நீலகிரி வந்தால், மாவட்டத்துக்கு பல திட்டங்கள் கிடைக்கும் என செய்தியாளர்கள் கூறியதற்கு, “வராமலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்” என்றார். வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, அரசு கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா மற்றும் வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *