ஷார்ஜா:
வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்களை எடுத்தது. ஜாக்கர் அலி 41 ரன்னும், தன்ஜித் ஹசன் 40 ரன்னும் எடுத்தனர்.
யு.ஏ.இ. சார்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டும், மைதுல்லா கான், சாகிர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் யு.ஏ.இ. அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது அலிஷான் ஷராபுவுக்கும், தொடர் நாயகன் விருது முகமது வசீமுக்கும் வழங்கப்பட்டது.