முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து!!

திருச்சி:
மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாளப் போராட்டம்தான். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில்லை. பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு நெருக்கடி தருகிறது. மேலும், மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. திட்டமிட்டே இதை செய்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாததால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான். இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாஜக திமுகவுடன் நெருங்கி விடக்கூடாது; நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்ற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது. திமுக மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை ஏற்று நடத்தும்போது, அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்று தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்.

அது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் தெரியும். ஆனால், திமுக மீது சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக விமர்சனத்தை முன்வைக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன தமிழர்களின் தொன்மை, நாகரிகம் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. தமிழர்கள் சாதி, மதமற்றவர்கள் என்பதற்கான தரவுகள் கீழடி மூலம் கிடைத்துள்ளன.

இதை வட இந்திய புராணத்தின் மீதும், போலியான கதையாடல் மீதும் நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *