கண் ஆரோக்கியத்தை காக்கும் உதவும் மாம்பழம்!!

தற்போது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அது இனிப்பு கலந்த பழம் என்று நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி செரிமானத்தை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை கொண்டவை. இந்த சமயத்தில் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  1. சத்துக்கள் அதிகம்
    மாம்பழம் வெறும் இனிப்பு பழம் மட்டுமல்ல, சத்தானவை. ஒரு மாம்பழத்தில் (சுமார் 200 கிராம்) தோராயமாக 150 கலோரிகள், சுமார் 3 கிராம் நார்ச்சத்து மற்றும் தினசரி வைட்டமின் சி தேவையில் 75 சதவீதமும், வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதமும் கொண்டிருக்கிறது. அத்துடன் பி6, தாமிரம், வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் வழங்குகிறது. மாம்பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியமும் குறைவாக உள்ளது. மேலும் இயற்கை சர்க்கரைகள் நார்ச்சத்துடன் கலந்திருக்கின்றன. அதனால் செயற்கை இனிப்பு வகைகளை விட இது சிறந்த தேர்வாக அமைகிறது.
  2. சருமத்தை பிரகாசமாக்கும்
    மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கொலாஜனை உருவாக்கவும், மந்தமான சருமத்திற்கு பொலிவூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் மாம்பழத்தை சாப்பிடுவது சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பதோடு இயற்கையாகவே சரும அழகை பிரகாசிக்க செய்யும்.
  3. செரிமானத்திற்கு உதவும்
    மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடைபெற உதவும். அதிலிருக்கும் அமிலேஸ் போன்ற இயற்கை நொதிகள் உணவை உடைப்பதை எளிதாக்கும். வயிறு உப்புசமாகவோ, மந்தமாகவோ இருப்பதாக உணர்ந்தால் மாம்பழங்கள் சாப்பிடலாம்.
  4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
    மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.
  5. கண் ஆரோக்கியத்தை காக்கும்
    கண்கள் வறண்டு போனாலோ, சோர்வடைந்தாலோ மாம்பழம் சாப்பிடுவது பலனளிக்கும். ஏனெனில் மாம்பழத்தில் வைட்டமின் ஏ, லுட்டீன், ஜியாசாந்தைன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கண் வறட்சி, சோர்வு மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
  6. பசியை சமநிலைப்படுத்தும்
    நன்கு பழுத்த மாம்பழத்தில் நார்ச்சத்துடன் கலந்திருக்கும் இயற்கையான இனிப்பு, நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். பசியை சமநிலைப்படுத்தி அதிகம் சாப்பிடாமல் தடுக்கும். உடல் ஆற்றலை பலப்படுத்தும்.
  7. முடியின் வலிமையை அதிகரிக்கும்
    மாம்பழத்தில் இருக்கும் போலேட், வைட்டமின்கள் ஏ, சி போன்றவை உச்சந்தலை மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களாகும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். பருவ காலம் முழுவதும் முடிகள் வலுவாக இருக்க உதவும்.
  8. உற்சாகமாக வைத்திருக்கும்
    மாம்பழங்களில் உள்ளடங்கி இருக்கும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான இயற்கையான சக்தியை கொடுக்கும். அதனால் உற்சாகத்துடன் அன்றைய நாளை இயங்க வைக்கும்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *