புதுவை ஜிப்மரில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை திறந்து வைத்த மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் !!

புதுச்சேரி:
“காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை 2027-க்குள் இயங்கும். காரைக்காலில் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் கோரிக்கையை ஆலோசித்து வருகிறோம்” என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார்.

புதுவை ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (மே 27) நடந்தது. மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார்.

இப்பிரிவு மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் மத்திய பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு 350 முதல் 450 அவசர சிகிச்சை நோயாளிகளை கையாளும் திறன் கொண்டது.

நோயாளிகள் பராமரிப்பு, செயல்திறன், அவசரகால தயார்நிலை ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த பிரிவு வடிவமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் ஜிப்மரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜிப்மர் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குகிறோம். பல வளர்ச்சித் திட்டங்கள் நடக்கிறது.

அவசர சிகிச்சைப் பிரிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்கள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளோம். அதை உரிய காலத்துக்குள் செயல்படுத்தவும் அறிவுறுத்துவோம்.

நடப்பாண்டு 1450 கோடி ரூபாய் ஜிப்மருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல மேம்பாட்டு திட்டப்பணிகள் நடக்கிறது. காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை வரும் 2027 ஜூன் மாதத்துக்குள் இயங்கத் தொடங்கும்.

இங்கு 470 படுக்கை வசதிகள் அமையும். இதற்கான அனைத்து நிதியும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் நடக்கிறது.

காரைக்காலில் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளது. சுகாதாரத் துறைக்கு வந்துள்ளது. அதை ஆலோசித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த விழாவுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். விழாவில் பேரவைத்தலைவர் செல்வம், செல்வகணபதி எம்பி, ஆறுமுகம் எம்எல்ஏ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *