தமிழகத்தில் திமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு, நல்லாட்சி நடப்பதாகக் கூறினால் எப்படி ஏற்பது? – சீமான் கேள்வி!!

மதுரை:
தமிழகத்தில் திமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு, நல்லாட்சி நடப்பதாகக் கூறினால் எப்படி ஏற்பது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சென்னையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகி போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? இதில் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மக்களுக்கு ஆயிரம் ரூபாய், இலவச பேருந்துதான் அரசியலா? எது அரசியல்? கூட்டணி தர்மத்துக்காக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தவெகவை விமர்சிக்கிறார். காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி அமைத்தால் அவர் இப்படி பேசுவாரா?

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, கை குலுக்கி பேசியபோது கல்வி நிதி கொடுக்குமாறு கேட்க வேண்டியதுதானே? ஏற்கெனவே நடந்த 3 நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்து விட்டு, இப்போது முதல்வர் சென்றுள்ளார்.

நிதி கொடுக்கவில்லை என்றால் எதற்காக வரி செலுத்துகிறீர்கள்? நூலகம், நினைவிடம், சிலைகள் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது. அவர்களின் சொத்தை விற்றா கட்டுகிறார்கள்?

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பார்கள். அன்று எனக்கு வேறு போராட்டம் உள்ளது. மதுரையில் ஆடு, மாடுகளின் மாநாடு வைத்திருக்கிறேன். அதில் பங்கேற்பேன். தமிழகத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வருவதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்சினைகளை தீர்த்து வைத்தேன் என்று கூறியிருந்தால் பரவாயில்லை. ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என்று முதல்வர் சொல்கிறார். இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா?. ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு நல்லாட்சி, வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *