18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வாகை சூடி அமர்க்களப்படுத்திய பெங்களூரு அணியின் வெற்றி ரகசியம் என்னவெனில், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் ஜொலிக்கிறார்கள். அந்த அணியில் இதுவரை 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்று இருப்பதே அதற்கு சான்றாகும்.
அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த சீசனில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை 8 அரைசதங்களுடன் 614 ரன்கள் குவித்துள்ளார். பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட் (21 விக்கெட்), குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் பலம் சேர்க்கிறார்கள்.
பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியதுடன் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. மேலும் அந்த அணி இந்த சீசனில் 8-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது.
கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை தனது நேர்த்தியான திட்டமிடுதல் மற்றும் அணுகுமுறையால் பஞ்சாப் அணியை கோப்பையின் பக்கம் வரை அழைத்து சென்று விட்டார். அவர் இன்னும் ஒரு தடையை வெற்றிகரமாக கடந்தால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.
பஞ்சாப் அணியின் பிரதான பலமே இந்திய வீரர்கள் என்றால் மிகையாகாது. சர்வதேச போட்டியில் விளையாடாத 6 வீரர்களை (பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், விஜயகுமார் வைஷாக்) ஆடுல் லெவனில் கொண்டுள்ள அந்த அணி அவர்களின் அபாரமான ஆட்டத்தால் வீறுநடை போடுகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (39 சிக்சருடன் 603 ரன்), பிரப்சிம்ரன் சிங் (523), பிரியான்ஷ் ஆர்யா (451), நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ்சும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், விஜய்குமார் வைஷாக், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஹர்பிரீத் பிரார்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன் அல்லது டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.