சென்னை;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் ஆளும் திமுகவை பொறுத்தவரை, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
முன்னதாக மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’என்னும் இயக்கத்தை தொடங்கி ஒவ்வொரு பூத்திலும் உள்ள 36% வாக்காளர்களை கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கழக உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் , திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கட்சி சார்ந்த பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தாலும், அரசுப் பணிகள் குறித்தும் தீவிரமாக முதல்வர் ஆலோசனைகள் செய்து வருகிறார்.
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறை சார்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வவேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் மற்றும் துறை சார்பான செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்