தமிழகத்தில் முருகனுக்கென்று தனி மதிப்பு உண்டு – சீமான்!!

புதுக்கோட்டை / திருச்சி:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக பாஜக நடத்துகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், நாங்கள் உளமாறப் பிடிக்கிறோம். பாஜக நேற்று தொடங்கிய கட்சி அல்ல.

அதேபோல, முருகனும் புதிதாகத் தோன்றவில்லை. இவ்வளவு நாள் முருக பக்தர்கள் மாநாட்டை ஏன் நடத்தவில்லை? தமிழகத்தில் முருகனுக்கென்று தனி மதிப்பு உண்டு. எனவே, முருகனை முன்னிறுத்தினால் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜகவினர் கருதுகிறார்கள். அது நடக்காது.

பாஜகவினர் அரசியலுக்காகத்தான் மாநாடு நடத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் ராமர் கோயில், கேரளாவில் ஐயப்பன், பூரியில் ஜெகநாதர்போல தமிழகத்தில் முருகனை முன்னிறுத்துகிறார்கள்.

எப்போதும் தனித்தே போட்டி: அவர்கள் செய்வது மத அரசியல்தானே தவிர, மக்கள் அரசியல் அல்ல. இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் அல்ல தமிழர்கள். இத்தகைய மத அரசியலை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். 2026 மட்டுமல்ல, 2029, 2031 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். இவ்வாறு சீமான் கூறினார்.

தொடர்ந்து, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்த சீமான், அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

அநீதியான ஆட்சியாளர்கள்… அதிமுக- பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச வந்திருக்கலாம். டாஸ்மாக் மது பாட்டில்களைப் பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டதுபோல, நெல்மணிகளைப் பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டுள்ளனவா? இதுபோன்ற அநீதியான ஆட்சியாளர்களுக்கு மீண்டும், மீண்டும் வாக்களிக்கும் மக்களும் இதற்கு பொறுப்பு” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *