நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவு!!

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக மாவட்டத்தில் 4 தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15-ம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், ‘ ரெட் அலர்ட் ‘ அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

இந்நிலையில் நேற்று முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணியர் இயற்கை காட்சிகளை ரசித்தனர். கடும் குளிரால் உள்ளூர் மக்களும் அவதிப்பட்டனர்.

குன்னூரில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தது. பலத்த காற்றுடன் சாரல் காணப்பட்டது. அதில், வண்டிச்சோலை அளக்கரை சாலையில் மரம் விழுந்தது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், நெலாக்கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் ஆசியா என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது. இது குறித்து பகுதி மக்கள் போலீஸார் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் மக்களுடன் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்: நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானி 168, பார்சன்சன்ஸ் வேலி 132, பந்தலூர் 130, சேரங்கோடு 118, போர்த்தி பந்து 94, எமரால்டு 57, தேவாலா 52, ஓவேலி 43, செருமுள்ளி 39, பாடந்தொரை 37, நடுவட்டம் 36, கூடலூர் 30, கிளன்மார்கன் 23, ஊட்டி 16, குந்தா 13, கோத்தகிரி 4, குன்னூர் 3, கிண்ணக்கொரை 2 மி.மீ., மழை பதிவானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *