‘கிளாட்’ தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவி ராகிணிக்கு சால்வை அணிவித்து, தனது பேனாவை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

திருச்சி: ‘
கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.

ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார்.

இதுகுறித்து மாணவி ராகிணி கூறியதாவது: எனது தாய் சிறுவயதிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றார். எனது தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர்தான் என்னை வளர்த்தனர்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘கிளாட்’ தேர்வு குறித்து அறிந்து, அந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்தான் காரணம்.

தேசிய சட்டப்பல்கலையில் சேர்ந்த எனக்கு முதல்வர் ஸ்டாலின், தனது பேனாவை பரிசளித்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக நகரச் செயலாளர் கே.கே.எம்.தங்கராசு இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விமான நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிற்பகலில் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *