தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!!

சென்னை:
தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று சென்னையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் இ.விஷாலாட்சி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தனியார் மயமாக்கி வருகிறது. இதனால், கிராமப்புற சுகாதார செவிலியர்களின் முக்கிய பணியான தடுப்பூசி வழங்கும் பணி, அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அப்பணி இடைநிலை சுகாதார வழங்கல் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களிடம் வழங்கப்படுகிறது.

இது கிராமப்புற செவிலியர்களின் பணி பறிப்பு மட்டுமல்ல, இது தடுப்பூசிகளை இலவசமாக உரிய நேரத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பெறும் உரிமைகளுக்கே எதிரானதாகும். இது ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி கிட்டாமல் செய்துவிடும். எனவே, தமிழக அரசு இந்நடவடிக்கையை கைவிட்டு, கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசிகளை வழங்குவதை தொடர வேண்டும்.

8,488 துணை சுகாதார நிலையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 50 சதவீத காலிப்பணியிடங்கள் இருப்பதால், பணியில் உள்ள கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆண் சுகாதார ஆய்வாளர்கள் பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளில் கிரேடு 1 பதவி உயர்வு வழங்குவதுபோல் பெண் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, கடந்த 23-ம் தேதி தொடங்கியுள்ள கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 10-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *