நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும் – இயக்குநர் கே.பாக்யராஜ்!!

நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார். அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’.

அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “கே ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன்.

அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியில் தொடங்கும் பாடலையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.

நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தின் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளை சொன்னார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான்.

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய ’மயிலு’ என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே ‘படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.

இயக்குநர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *