சென்னை:
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முகமது சமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், ஜஹானின் தனிப்பட்ட பராமரிப்புக்காக மாதம் ரூ.1.5 லட்சமும், அவர்களின் மகளின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று சமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.