மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தேர்தலையொட்டிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாலை பவனியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.
அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக – பாஜக கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அமைப்பது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். மேலும், பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.
கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதுவரை 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பொதுவெளியில் பெண்கள் நடமாடக் கூட முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
அஜித் குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளீர்கள்?. தீய சக்தியான திமுக வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்.
அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா, ஸ்டாலினுக்கு நியாபக மறதியா.. கடந்த 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து தானே போட்டியிட்டது. ஏன் மறந்துவிட்டாரா.
நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது சரி.. நாங்கள் கூட்டணி வைத்தால் தவறா? மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நீங்க தமிழகத்துக்கு செய்த திட்டங்கள் எதாவது ஒன்று இருக்கிறதா.. எதுவுமே செய்யவில்லை.
10 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யவில்லை. கொள்ளை தான் அடித்தீர்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்படவில்லை. அது 40 நாள் என்று ஆகிவிட்டது. கொள்ளையடிப்பதுதான் திமுகவின் குறிக்கோளாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் வந்துள்ள கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் ஏற்படலாம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.