16-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாதகால தி.மு.க. அரசு, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலையில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விபரம் வருமாறு:பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம்.

குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம்.

தமிழ்நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதேபோல், முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் அடாவடி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு.மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகும் அவலம்.

மாநகராட்சி கடைகளுக்கு பல மடங்காக வாடகை உயர்வு.திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதனை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு.மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும், தி.மு.க.வின் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், திருவண்ணா மலை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் ஸ்டாலின் அரசை கண்டித்தும்; பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி தலைமையிலும்; ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பேரூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *