சிலருக்கு உடம்பின் சில பகுதிகளில் முகம், கை, கால்களில் மருக்கள் அதிகமாக இருக்கும். அந்த மருக்களை அகற்றிவிட வேண்டும் என தோன்றினாலும் அதனால் ஏற்படும் வலியை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள். மருக்களை இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம்…
சாலிசிலிக் அமிலம், அல்லிசின், என்சைம்கள் முதலானவை நம் வீட்டில் உள்ள பொருட்களிலேயே நிறைந்து உள்ளன. இவற்றை பயன்படுத்தி மருக்களை எளிமையாக அகற்றி விடலாம்.
அல்லிசின் பூண்டில் அதிகமாக உள்ளது. இந்த அல்லிசின் மருக்களை உண்டாக்கும் வைரசுடன் போராடும் தன்மை பெற்றது. அதனால் பூண்டு சாறை தினமும் மருக்களின் மீது தடவலாம்.
அன்னாசியில் உள்ள என்சைம்கள் மருக்களை எரித்து அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் சில வாரங்களுக்கு தொடர்ந்து அன்னாசி பழத்தை பிழிந்து அதன் சாறை மருக்களின் மீது தடவலாம்.
மருக்களை வேரோடு அகற்ற ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாம். ஒரு காட்டன் பஞ்சு அல்லது துணியில் ஆப்பிள் சைடர் வினைகரை நனைத்து மருக்களின் மீது தொடர்ந்து 3 முறை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவர, நாளடைவில் மருக்கள் கருமை நிறமாக மாறும். பின்னர் அதை சுற்றியுள்ள தோல் வறண்டு பின்னர் மரு வேரோடு விழுந்து விடும்.
உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நாளடைவில் விழுந்து விடும். உருளைக்கிழங்கு சாறை மட்டும் இரவில் மருக்களின் மீது தடவி அடுத்த நாள் காலையில் கழுவ வேண்டும். அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
வெங்காயத்தின் மீது உப்பு தடவி அதன் சாறை மருக்கள் மீது தடவி வரலாம். அதேபோல் கற்றாழை ஜெல்லையும் மரு உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்துவர நாளடைவில் மருக்கள் உதிர்ந்துவிடும்.
சாலிசிலிக் அமிலம் இயற்கையாகவே மருக்களைப் போக்க உதவுகிறது. ஆனால், தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக சரும மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
முகத்தில் உள்ள மருக்களை நீக்கும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து மருக்களை கிள்ளுவது, சொரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது மேலும் பரவ வாய்ப்புள்ளது. மருக்களை தொட்டுவிட்டு கைகளை கழுவுவது மிகவும் நல்லது. மருக்களை அகற்ற எடுத்தவுடன் நீங்களாகவே எதையும் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.