சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 13 சேவைகள் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், புதிய ஆதார் இணைப்பு, வீட்டு வசதி வாரியத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளே மக்கள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 45 சேவைகளும் நகர்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் அதிகமாக வருவதால் கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நவம்பர் இறுதி வரை சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.