தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.