இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் ஷாருக்கான் என்பது அனைவருக்குமே தெரியும். அதே நேரத்தில், இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா? அது, நடிகை ஜூஹி சாவ்லா தான்.
1984-ம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற ஜூஹி சாவ்லா, பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்து ஷாருக்கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக ஜொலித்தார்.
2010-ம் ஆண்டுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியளவில் வெற்றி படங்கள் கொடுக்காத போதும், அவர் பணக்கார நடிகையாக வலம் வருகிறார்.
பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டுவதே காரணம் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணைப் பங்குதாரராக இருக்கும் ஜூஹி சாவ்லா, ரூ.9,150 கோடி மதிப்புள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.620 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம்.
இப்படி பல்வேறு தொழில்களில் செய்துள்ள முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் ஜூஹி சாவ்லா பணக்கார நடிகையாக வலம் வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டும் (2024-ம் ஆண்டு செப்டம்பர் கணக்கீட்டின்படி) ரூ.4,600 கோடியாம்.