ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை,
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான “திறன்” (THIRAN – Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.

மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TNSPARK (Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய பாடத்திட்ட பாடநூல்களையும் வெளியிட்டார்.


இதன் பின்னர் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

“ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றன்.

அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ‘திறன்’ மற்றும் TN Spark ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். இன்றைக்கு இத்தனை ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள்.

எனவே உங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.

மாணவர்களுக்கு ‘அகரம்’ சொல்லிக் கொடுத்து, அவர்கள் படிக்கப் போகின்ற Robotics, AI போன்ற பெரிய, பெரிய படிப்புக்கெல்லாம் அடித்தளம் இடுவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள் தான். உங்களிடமிருந்து தான் கல்வியை மட்டுமின்றி இன்றைக்கு உலகையும் மாணவச் செல்வங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட ஆரம்பக் கல்வியை வழங்கும் பணியை தொடங்கவுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள், பாராட்டுக்கு உரியவர்கள். திராவிட மாடல் அரசு அமைந்த நாள் முதல், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீட்டுகின்ற ஒவ்வொரு திட்டமும், வரலாற்றுச் சாதனையாக உயர்ந்து நிற்கின்றது.

தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள் நீங்கள் தான். இதனை நான் சும்மா சொல்லவில்லை. மத்திய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன.

அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி.

குறிப்பாக, விளையாட்டுத் துறை அமைச்சராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள், பிள்ளைகளை படிக்கச் சொல்லும் அதே வேளையில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *