மான்செஸ்டர்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.
நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 358 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியின் முதல் நாளில் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் வலது கால் விரலில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவர் பாதியில் வெளியேறினார்.
நேற்றைய 2-ம் ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூர் விக்கெட் விழுந்ததும் கால் காயத்துடன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார். இதில் அரைசதம் அடித்தார். பின்னர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் காயத்துடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டை டெண்டுல்கர் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார்.
அவரது 50 ரன்கள், உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்து வதற்கு தேவையான மன உறுதியை நினைவூட்டுகிறது. இந்த துணிச்சலான முயற்சி நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்போது, உங்களுடைய நாட்டுக்காக எந்தளவில் விளையாடினாலும் இது போன்ற தைரியம் மற்றும் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும். காயத்தையும் தாண்டி பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்டுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.
அதேபோல் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறும் போது, ஆண்டிகுவாவில் அனில் கும்ப்ளே தாடை உடைந்ததைத் தாண்டி விளையாட வந்ததைப் பார்த்துள்ளேன். அது போன்ற நிகழ்வை இனிமேல் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் ரிஷப்பின் தைரியம் மூலம் அதை பார்த்தேன் என்றார்.