அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ரூ.10 லட்சம் அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை நீக்க கோரியும் அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்ற மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்றும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.
அதேநேரம், அரசு நலத்திட்டம் தொடங்குவது குறித்தோ, அதனை செயல்படுத்துவது குறித்தோ எந்த உத்தரவையும் தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடுமெனவும் காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.