திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; அமலாக்கத்துறைக்கும் அஞ்ச மாட்டார்கள்- ஆர்.எஸ்.பாரதி…..

சென்னை,
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இதனை சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத்துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பிறகும் கூட இன்றைக்கு திடீரென சோதனை நடத்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது. பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள்.

அதனை நீதிமன்றத்தின் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்.

அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. ’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என பேசும் மத்திய அரசுதான் ’வாக்கு திருட்டு’ அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.

வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் மத்திய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.


சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க கவர்னரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது.

தனது ஏஜெண்டான கவர்னருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் அமலாக்கத்துறை தலை வைத்தும் படுக்கவில்லை.


இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாகுவது மட்டுமே மத்திய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

அதனை வைத்து பாஜக தலைவர்களும் பாஜகவின் அடிமைகளும் தங்களது மனம்போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது.

இந்த அவதூறுகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. அது தெரிந்தும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; அமலாக்கத்துறைக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.

இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *