புதுடெல்லி;
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்திய மக்களுக்கு “இரட்டை போனஸ்” காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் சுதந்திர உணர்வால் நிறைந்துள்ளது. இந்த நேரத்தில், டெல்லி துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலையின் இணைப்புப் பணி முடிவடைந்தது.
இது டெல்லி மற்றும் குருகிராமில் வாழும் நடுத்தர மக்களின் பயண வசதியை அதிகரிக்கும்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தான் பேசியதை நினைவுபடுத்தினார்.
உலக நாடுகள் இந்தியாவை மதிப்பிடும்போது, டெல்லியை வளர்ச்சி மாதிரியாகப் பார்ப்பதால், அதனை ஒரு வளர்ச்சி மாதிரியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில், டெல்லி மாநகராட்சிச் சட்டத்தில் இருந்த ஒரு அநீதியான விதியை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒரு துப்புரவுத் தொழிலாளி தகவல் தெரிவிக்காமல் வேலைக்கு வரவில்லை என்றால், ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படலாம் என்ற விதி இருந்தது.
சமூக நீதியைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் இது போன்ற பல அநீதியான சட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
இதுபோன்ற சட்டங்களை அடையாளம் கண்டு அழிப்பவர் இந்த மோடி எனக் கூறினார். “எங்களைப் பொருத்தவரையில் சீர்திருத்தம் என்பது நல்லாட்சியை விரிவுபடுத்துவதே” என்றார்.
அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜிஎஸ்டியை மேலும் எளிமையாக்குதல் மற்றும் வரி விகிதங்களை சீரமைத்தல் ஆகிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு மற்றும் பெரிய தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என அனைவரும் பலன் பெறுவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்திய மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டார்.