சென்னை;
சென்னை ஜாபர்கான் பேட்டையில் ‘பிட் புல்’ ரக நாய் கடித்து குதறியதில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதை தடுக்க முயன்ற நாயின் உரிமையாளரை கடித்ததில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாகரன் உயிரிழந்தது தொடர்பாக நாயின் உரிமையாளரான பூங்கொடி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல், முறையாக விலங்குகளை கையாளாமல் இருந்தது தொடர்பான பிரிவுகளில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நடிகை வினோதினி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்த விஷயத்தை நேரடியாகத் தகவல் கொடுத்த பெண்ணிடம் பேசிக் கேட்டேன். இது தெரு நாய் அல்ல.
இந்த நாய் ஒரு பிட்-புல் (Pitbull) இன நாய். பல முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் தடைசெய்யப்பட்ட இனம். இதை உரிமையாளர் ஒரு இருண்ட அறைக்குள் ஒளி, உடற்பயிற்சி இல்லாமல் அடைத்து வைத்து, சட்டவிரோதமாக குட்டி நாய்களை உற்பத்தி செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார் என்று அவர் சொல்கிறார்.
இந்த நாய் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்பு தன்மையை (aggression) காட்டியிருக்கிறது. ஆனாலும், உரிமையாளர் தொடர்ந்து இதை குட்டி உற்பத்திக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார். இதுதான் அதன் விளைவு.
பிட்-புல் இன நாய்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். உரிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நாய்களை பெருக்குபவர்கள் தடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
நாயை செல்லப்பிராணியாகக் கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் இந்திய (Indie) நாய்களைத் தத்தெடுக்கலாம்.
•இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை குறையும்.
•குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த உணவு செலவு.
•நம் வானிலைக்கு உகந்தது.
•ஏசி தேவையில்லை.
•செல்லப்பிராணி ஸ்பா போன்ற தொழில்களுக்கு தேவையில்லை.
இது ஒரு தீர்வு தான், ஆனால் ஒரே தீர்வு அல்ல. அனைத்து பிரபலங்களும் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாய்களை விட்டு, தெருநாய்களைத் தத்தெடுக்க வருவார்களா?
இது தெருநாய் பிரச்சனையை குறைக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.