திமுகவை தமிழகத்தில் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: அமித் ஷா !!

திருநெல்வேலி:
‘தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:சரித்திரம், வீரம், பண்பாடு, கலாச்சாரம் மிகுந்த தமிழ் மண்ணை வணங்குகிறேன். நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றிய இல.கணேசன் தனது வாழ்க்கையை பாஜகவுக்காக அர்ப்பணித்தவர்.

அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னிறுத்தி பெருமையடையச் செய்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

பிரதமர், முதல்வர் ஆகியோர் கைதாகி சிறைக்குச் சென்று, 30 நாட்களுக்கு மேலிருந்தால் அவர்களது பதவி பறிபோகும் புதிய மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

தமிழகத்தில் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்துள்ளனர். சிறையில் இருந்தவர்கள் ஆட்சியாளர்களாக தொடர முடியுமா, சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியுமா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை கருப்புச் சட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து துறை ஊழல், இலவச வேட்டி-சேலையில் ஊழல், வேலை வாய்ப்பு வழங்குவதில் ஊழல் என, அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். வரும் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவு கட்டப்படும்.

திமுகவும், காங்கிரஸும் தங்களது வாரிசுகளை அரியணையில் அமர்த்த துடிக்கிறார்கள்.

சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கவும், ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும் கனவு காண்கிறார்கள். அந்த கனவ ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் திமுக கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்.

7,980-க்கும் மேற்பட்ட பூத்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். கடந்த தேர்தலில் பாஜக 18 சதவீதமும், அதிமுக 21 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன.

அவை இரண்டும் சேர்ந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழகத்தை வளர்ச்சி, முன்னேற்றம் அடையச் செய்யும் கூட்டணி.

அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. ரூ. 1 லட்சம் கோடி திட்டமுதலீட்டில் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு திட்டங்களும், நாட்டின் அனைத்து பகுதிகளும் பாரபட்சமற்ற வகையில் முன்னேறும் வகையிலான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின் றன.

இதை மக்களிடம் சொல்ல வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம், எம்.ஆர். காந்தி எம்எல்ஏ, முன்னாள் எம்எல் ஏ.க்கள் சரத்குமார், விஜயதரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்? – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை சேர்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, இவரை ‘ராதா’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானார்.

1993-ல் மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்தார். பின்னர், திமுக செய்தி தொடர்பாளராக இருந்தார்.

2022-ம் ஆண்டு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று, 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு தொடுத்து தீர்வு கண்டுள்ளேன். தமிழகத்தில் நெய்யாறு, அடவிநயினார்,

செண்பகவல்லி, அச்சங்கோயில் – பம்பை – வைப்பாறு, முல்லை பெரியாறு, ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, காவிரி என 19 நதிநீர் பிரச்சினைகள் உள்ளன.

இவற்றுக்கு மத்திய அரசால்தான் தீர்வு காண முடியும். திமுகவிலிருந்து நான் விலகவில்லை. விலக்கப்பட்டேன். விளக்கம் கூட கேட்கவில்லை. திமுக சட்டப்படி பார்த்தால் நான் அங்கு உறுப்பினர்தான்.

நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்? எனது உழைப்பை திமுக வரலாறு சொல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *