ஈஷா யோக மையத்தில் கோலாகலம்: மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி- கவர்னர்கள் பங்கேற்பு!!

கோவை:

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக ஜகதீப் தன்கர் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

பின்னர் சாலை மார்க்கமாக ஜகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். மாலை 5.40 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் அங்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்கிறார்கள்.

இதுதவிர மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *