உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளப்பாளையம் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வந்தோம். தற்போது வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.