உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், சாதுக்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு பக்தர்கள் உள்பட பல கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இந்நிலையில் கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பதற்காக வந்த மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனோலிசா போஸ்லே என்ற இளம்பெண் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
குறைந்த பட்ச ஒப்பனை, பாராம்பரிய உடையில் அவரின் காந்த கண்ணழகும், கவர்ச்சியும் ஒரே நாளில் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. இளைஞர்கள் பலரும் பிரவுன் பியூட்டி என பெயரிட்டு அவரை கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனோலிசா போஸ்லேவை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவர் பாலியல் வழக்கில் கைதானதால் மோனோலிசா போஸ்லேவின் சினிமா வாய்ப்பு தடைபட்டது.
ஆனாலும் மோனோலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது. அதை ஏற்று சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் மோனோலிசா போஸ்லேவுக்கு மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் மோனோலிசா போஸ்லே பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. மேலும் படத்தில் அவரது புதிய தோற்றத்தின் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.