நாகை,
பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழகம் முழுவதும் தனது பிரசார பயணத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த 13-ந் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய விஜய், இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.
ஏற்கனவே, அவர் விக்கிரவாண்டி, மதுரையில் பிரமாண்ட மாநாடுகளை நடத்தி இருக்கிறார். அப்போது, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்திப்பதற்காக மாநாட்டு மேடையில் இருந்து 800 மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்லும் அளவுக்கு பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை, சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் திறந்தவெளி வேனில் நின்றபடி, தொண்டர்களுக்கு மத்தியில் கைகூப்பி வணங்கியபடி சென்றார்.
அவர் வாகனம் மேடை நோக்கி செல்வதற்காக தனியாக தார் சாலையே அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாகை, திருவாரூரில் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அந்த இரு மாவட்டங்களிலும் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் செய்திருந்தனர். விஜய் வருகையையொட்டி இருமாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.