நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாகவும், பொய்யாகவும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்!!

சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், சரோஜாதேவி, ராஜேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

இதில், நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாகவும், பொய்யாகவும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள், சங்க உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும், மற்ற நபர்கள் அத்தகு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மேலும், கடந்த 67-வது பொதுக்குழுவில் புதிய சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிக்காக வங்கியிலிருந்து ரூ.40 கோடி வரை கடன் தொகை பெறுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது வங்கிக் கடன் தொகைரூ.25 கோடிக்கு மட்டும் பெறப்பட்டு, அதற்கான வட்டி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்சமயம்,கட்டிடத்தின் உள்கட்டமைப்பில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்க, மேலும் ரூ.10 கோடி வரை தேவைப்படுவதால், வங்கியிலிருந்து கூடுதல் கடன் பெறுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *