சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஒபிஎஸ்சும் நானும் தொலைபேசியில் அடிக்கடி பேசுவோம்.
நேற்று நேரில் வந்ததால் பேசிக்கொண்டு இருந்தோம், தவிர அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.
எடப்பாடி பழனிசாமி துரோகத்திற்கு எதிராக 8 ஆண்டுகளாக அரசியல் கட்சியை நடத்தி வருகிறோம். செங்கோட்டையனின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் யாரையெல்லாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம் என்ற கருத்தில் உடன்பாடு இல்லை.
பழனிசாமியை முதல்வராக ஏற்று நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. அவருடைய துரோகத்தை எதிர்த்துதான் நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தது எடப்பாடி பழனிசாமிதான்.
2021 தேர்தலை விட 2026-ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தன் கையில் கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார். கடந்த ஒராண்டாகவே சீமான் பேச்சு தடுமாற்றமாகவும், கோபத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
குறிப்பாக விஜய் கட்சிக்கு வந்த பிறகு ‘தம்பி விஜய், நாங்கள் ஒன்றாக செயல்படுவோம்’ என பேசினார்;
இப்போது விஜயால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பேசுவது போல் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.