தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக பல்வேறு முதலீடுகளை ஈர்த்த வண்ணம் இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு, அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில் அடுத்த கட்டமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய ஆலையையை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், 14,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ இதனை உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது.
ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.