சென்னை:
செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது.
நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் பெரும் சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்துபோனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன். உறவுகளை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியைக் கோரி இருந்தார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை.
செப். 25ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தைப் பகுதியில் அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை.
பின்பு, செப். 29 அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுசாமிபுரத்தில் 27ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரினார். மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவு காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் மொத்தம் 606 பேர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தில் கூட்டம் நடத்த மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சியின் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால், கரூரில் மக்கள் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினார்.
செப். 27ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கடந்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இங்கே, அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை, உணவு ஏற்பாடும் ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை.
சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப். 25ம் தேதி எதிர்க்கட்சித் தலைவரின் பரப்புரை நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 வரை பங்கேற்றிருக்கிறார்கள். அந்த பரப்புரைக்கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்கள், 30 ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்கு நேர் மாறாக இந்த கட்சியினுடைய நிகழ்ச்சி நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தை பின் தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அட்சயா மருத்துவமனை அருகே பிரச்சார வாகனத்தை நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறி சென்றனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரை பல முறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் தவெக தலைவர் தனது உரையை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். காவல்துறையின் வழிமுறைகளை மீறி வாகனம் அட்சயா மருத்துவமனையில் இருந்து 30-35 மீட்டர் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினர் இடையே இது நிலைகுலையச் செய்தது.
இதனால், கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி மற்றம் மூச்சுத்திணறல் மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டுள்ளனர். கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து தகரை கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால், மின்சாரம் தாக்குவதைத் தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும், மக்கள் உதவி கோருவதைக் கவனித்து காவல்துறையினர் மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவர்களைக் காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸூம் வரவில்லை.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தவெகவினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனால், மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக கரூர் நகர காவல்நிலையத்தில் இரண்டு வழக்குள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் தவெக பரப்புரைக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் அறிந்த உடனேயே தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள்.
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டார்கள்.
பணிகளை விரைவுபடுத்திட திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட மருத்துவக் குழுவினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து ஹெல்ப் டெஸ்க் அமைத்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறை உதவியோடு அடையாளம் கண்டு உடற்கூராய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
கரூருக்கு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மற்றம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்களோடு செப். 27ம் தேதி இரவே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இது தவிர திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக வல்லுநர்கள், பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 பேர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பி இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13, பெண்கள் 18, குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த அனைவரையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் அன்று இரவு உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
28ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு மதியம் 1.10 மணி அளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது.
கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடிய பெரும் கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் 200க்கும் மேற்பட்ட போலீசார் கவனித்துக்கொண்டனர். துயராமான இந்த சம்பவத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. தீவிர காயம் அடைந்த 47 நபர்களுக்கு தலா ரூ 1 லட்சமமும், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்ற 55 பேருக்கு தலா ரூ. 50,000 மும் என மொத்தம் 143 பேருக்கு ரூ. 4.84 கோடி முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரிக்க செப். 28ம் தேதி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அக். 3ம் தேதி ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண உதவி அனைத்தும் சரியான முறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் இவ்விழக்கு சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான் எனது 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். நடத்தியும் இருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும்போது அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகள் மீறப்படும்போது அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சிகளை நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான், நமது தமிழ்நாடு மக்கள்தான்.
சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி, அரசின் உயர் அலுவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மைகளை வீடியோ ஆதாரத்தோடு தெளிவுபடுத்தினார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது நமது அரசு. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்தது நமது அரசு. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை உறுதியோடு நான் சொல்கிறேன்.
அதேநேரத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிர் விலைமதிப்பற்றது. இதை மனதில் கொண்டு செல்பட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.