புதுடெல்லி,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா (வயது 38) என்ற நர்ஸ், ஏமனில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் பணியில் இருந்தார்.
பின்னர் அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் மஹ்தியை கொலை செய்ததாகவும் கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தலைநகர் சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவுக்கு கடந்த ஜூலை 16-ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியானது. பின்னர் கடைசி நேரத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக நர்ஸ் நிமிஷாவை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தண்டனை நிறைவேற்றும் விவகாரத்தில் என்ன நடந்தது?’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு இந்த வழக்கின் மனுதாரரும், நிமிஷா பிரியாவுக்கு சட்ட உதவி அளித்து வரும் அமைப்புமான, ‘நிமிஷா பிரியாவை பாதுகாக்கும் சர்வதேச நடவடிக்கை கவுன்சில்’ சார்பில் ஆஜரான வக்கீல், ‘தண்டனை நிறைவேற்றுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி கூறும்போது, இந்த விவகாரத்தில் புதிய மத்தியஸ்தர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், எதுவும் பாதகமாக நடக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு (2026) ஜனவரிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதேநேரம் முன்கூட்டிேய விசாரணை தேவை என்றால் மனுதாரர்கள் முறையிடலாம் என்றும் கூறினர்.