சென்னை:
மதுரையில் சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவ பக்தரான செல்வமாலினி. இவர் தனது மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
கோயிலில் இருந்து செல்வமாலினி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றபோது, மதுரை வக்கீல் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது.
இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்த போது சாக்குமூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது போல தெரிந்தது. இதைப் பார்த்து பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை அழைத்து விஷயத்தைக் கூறியுள்ளார்.
பின்னர் சாக்குமூட்டையை பிரித்துபார்த்தபோது 500 ரூபாய் கட்டுகள் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இருந்துள்ளது. பின்னர் செல்வமாலினி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று ஒப்படைத்துள்ளார்.
அப்போது செல்வராணியின் நேர்மையைப் பார்த்து காவல்துறையினர் அப்பெண்ணுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சாக்கு மூட்டையில் கிடந்த பணம் ஹாவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஒருவர் தனது பணம் என சொந்தம் கொண்டாடி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அவரிடம் ரூ17 லட்சத்திற்கான ஆவணங்களை கேட்டு போலீஸார் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.