சென்னை,
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் நேரில் அழைத்து இன்று ஆறுதல் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.
த.வெ.க., கட்சித் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பிரசாரம் செய்தார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினரை, விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது.
அதற்காக அவர் முயன்றதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வீடியோ கால் மூலம் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் சந்திப்பதாக கூறினார்.
ஆனால், விஜய் கரூர் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் அது கைவிடப்பட்டது.கடந்த 18-–ந் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தார்.
இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த தவெக வழக்குரைஞர்கள், நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் நேற்று காலை உயிரிழந்த 36 பேரின் வீடுகளுக்கு நேராக சென்று அவர்களை வாகனங்களில் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு, வெண்ணைமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை 5 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் சென்னையில் இரவு தங்கவைக்கப்பட்டனர். உயிரிழந்த மோகன் (வயது 19) என்பவரின் தந்தை தனியாக வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 37 குடும்பத்தைச் சேர்ந்த 235 பேரை இன்று காலை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது உயிர் இழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.