தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை:
தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா – பிஹார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று பிஹாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “திமுக ஆளும் தமிழ்நாட்டில் திமுகவினர் பிஹாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *