கோபி:
“என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர்.
அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற இயலும்.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், துரோகத்துக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் அதை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் கூட தமிழக அரசியலில் தேர்தல் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் 1972-ல் இருந்து பணியாற்றியவன் நான். எம்ஜிஆருடன் எனது பயணத்தைத் தொடங்கி 1975-ல் கோவையில் முதல் பொதுக் குழுவை சிறப்பாக நடத்தி அவரது பாராட்டைப் பெற்றவன்.
அதன் பின்னர் ஜெயலலிதாவின் வழியில் இந்த இயக்கத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.
ஜெயலலிதா கைகாட்டிய பாதையில் தடம் புரளாமல், சலனத்துக்கு இடம் தராமல் பணியாற்றிய விசுவாசி நான். அதை அவரே பல தருணங்களில் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியுள்ளார். அவர்கள் இருவரின் காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட இந்த இயக்கம் வலுவாக இருக்கவே பணியாற்றினேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை இரண்டு முறை நான் விட்டுக் கொடுத்தேன்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை எப்படிப் பெற்றார் என்பதை இந்த நாடறியும். அப்படிப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பின்னர், அவர் எடுத்த பல்வேறு முடிவுகளின் காரணமாக கட்சி தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை தொடர்ந்து இழந்ததை நாம் பார்த்து வருகிறோம்.
எம்ஜிஆர் தேர்தல் தோல்வி அறியாதவர்.ஜெயலலிதா ஒரு முறை தோல்வியடைந்தால் அடுத்த முறை வெற்றியை வசமாக்கிவிடுவார்.
அவரது மறைவுக்குப் பிறகு, 4 ஆண்டு காலம் ஆட்சி நடந்தது. ஆனால், அதன்பின்னர் அதிமுக வெற்றி வாய்ப்புகளைப் பெறவில்லை. இதனால் துயரத்துடன் இருந்த அதிமுகவினரின் கருத்துகளை நாங்கள் 6 பேர் இபிஎஸ்ஸிடம் எடுத்துரைத்தோம்.
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் உணர்வு என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்.
அதிமுகவை ஒன்றிணைக்கவே நான் தேவர் ஜெயந்தி அன்று டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். அதற்குக் கிடைத்த பரிசுதான் நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு வருவதற்கு முன்னரே நான் அதிமுகவில் இருந்தவன்.
கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கொரு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.
கட்சியிலிருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர் தான்.
மேலும் கொடநாடு வழக்கில் அவர் ஏ1 என்பதை மறந்துவிட்டு, என்னை திமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சித்து வருகிறார்.
யார் ‘பி’ டீம் என்பதை நாடறியும். துரோகத்துக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் அதை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்தால் தான் வெற்றி பெற இயலும்.” எனத் தெரிவித்தார்.