கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலைப் பணிகளை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை,
சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை, கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் அது தொடர்பான பணிகளை அமைப்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 20.09.2024 நாளிட்ட அரசாணையின்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு 118 ஏக்கர் நிலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் உள்ள இந்நிலத்தில், பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தினை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இச்சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்கப்பட உள்ள நிலையில் இன்றையதினம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அங்கு அமைந்துள்ள நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், மரக்கன்றுகளை நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகரராஜா, அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *