முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி!!

மும்பை,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. தஸ்மின் பிரிட்ஸ் (23 ரன்), அன்னெகே பாஷ் (0), சுனே லுஸ் (25 ரன்), மரிஜானே காப் (4 ரன்), விக்கெட் கீப்பர் சினலோ ஜாப்தா (16 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் நடையை கட்டினர்.

ஆனால் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான லாரா வோல்வார்ட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு மிரட்டினார். இந்தியாவின் சுழல் ஜாலத்தை திறம்பட சமாளித்த அவர் சதத்தை நோக்கி துரிதமாக பயணித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது.

6-வது விக்கெட்டுக்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அன்னெரி டெர்க்சென்னை 35 ரன்னில் தீப்தி ஷர்மா வீழ்த்தினார். ஆனால் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லாரா வோல்வார்ட் தனது 11-வது சதத்தை எட்டினார். அவர் அரைஇறுதியிலும் சதம் அடித்தது நினைவிருக்கலாம்.

சதம் அடித்த கையோடு வோல்வார்ட் 101 ரன்களில் (98 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிக்கினார். அவர் தூக்கியடித்த பந்தை அமன்ஜோத் கவுர் தட்டுத்தடுமாறி பிடித்தார். அவர் வீழ்ந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது.

அப்போதே உலகக் கோப்பை கைக்கு வந்தது போல் கொண்டாடினர். எஞ்சிய விக்கெட்டையும் நமது பவுலர்கள் கபளீகரம் செய்து தென்ஆப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர்.

இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது. 52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *