முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந் தேதி மாலையில் நடந்தது.

கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலையில் சுவாமி குமர விடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்காக தெப்பக்குளம் அருகில் வந்து அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
29-ந் தேதி (புதன்கிழமை) இரவு குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
30, 31, மற்றும் நேற்று வரை 3 நாட்களிலும் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடைபெற்று வந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள்
கந்த சஷ்டி திருவிழா 12-ம் நாளான இன்று விழா நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா நிறைவு நாள் மற்றும் ஞாயிறு விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.