மேட்டூர் / தருமபுரி:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,625 கனஅடியிலிருந்து 7,445 கன
அடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணை நடப்பாண்டில் 7-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர், மழை தணிந்ததால் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.
இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 10,500 கனஅடியாகவும், மாலை 8,625 கனஅடியாகவும் இருந்த நீ்ர்வரத்து நேற்று காலை 7,445 கன அடியாக குறைந்தது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.88 அடியிலிருந்து 119.52 அடியாகவும், நீர் இருப்பு 93.28 டிஎம்சியிலிருந்து 92.70 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.
அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதால் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேபோல, கதவணைகள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக குறைந்தது.