கோவை:
திமுகவில் மட்டுமல்லாது, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும், “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறேன்.
இப்போது வருகின்ற பிரச்சினைகளை, ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கும்போது, திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் இபிஎஸ் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடு இருக்கிறது என்பது நாடு அறிந்த உண்மையாகிறது.
இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்பது தான் தத்துவம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.