புதுடெல்லி:
மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்த பழைய கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்களை வாங்க முடியும்.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2021-ம் ஆண்டில் அக்டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்தியா திட்டத்தை மேற்கொள்வது என மத்திய அரசு முடிவெடுத்தது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை, 84 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒத்துழைப்பு மூலம் இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தூய்மை பிரச்சாரத்தின் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் தேங்கியுள்ள தேவையற்ற பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கடந்த 5 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4,100 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, ஒரு பெரிய விண்வெளித் திட்டம் அல்லது பல சந்திராயன் திட்டங்களின் செலவை ஈடு செய்ய போதுமானது ஆகும்.
பழைய கோப்புகள் மற்றும் பிற கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தை அவற்றை விற்பனை செய்து சுத்தப்படுத்தியதன் மூலம் 923 லட்சம் சதுர அடி இடம் இப்போது முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பெரிய வர்த்தக வளாகம் அல்லது மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கடந்த அக்டோபர் மாதத்தில் கழிவுகளை விற்பனை செய்ததில் மட்டும் ரூ.800 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது 7 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கு போதுமான தொகையாகும்.
இந்த கழிவுகள் விற்பனை மூலம் 233 லட்சம் சதுர அடி இடம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.