கோயம்புத்தூர்
கோவை மாவட்டம் குப்பனூரில் செல்வ விநாயகர், பெருங்கருணை மாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த 7ம் தேதி மாலை, திருவிளக்கு வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து, மூத்த பிள்ளையார் வழிபாடு செய்யப்பட்டு, புற்று மண் எடுத்து வருதல் நடந்தது. பின்னர், இரவு முதல் கால வேள்வி, மறுநாள் 8ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 2ம் கால வேள்வி, மாலையில் எண்வகை மருந்து சாற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் 3ம் கால வேள்வி நடந்தது.
நேற்று காலை 5 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தலும், தொடர்ந்து, 4ம் கால வேள்வியும், நடந்தது.
பின்னர், காலை 7.00 மணிக்கு தீர்த்தக் குடங்கள் திருக்கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து, காலை 7 மணிக்கு மேல், செல்வ விநாயகர், பெருங்கருணை மாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு, சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பின்னர், பெருங்கருணை மாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாளுக்கு பெருந் திருமஞ்சனமும், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடுகளும் நடத்தப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இறுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் கனகராஜ், அறங்காவலர் குழு தலைவர் குப்பனூர் ஆர்.சதாசிவம், அறங்காவலர்கள் ரத்தினசாமி, ராஜாமணி, நாகராஜன், மனோகரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.