வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்!!

சென்னை: ​
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார்.

தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.

குடிமகனின் உண்மையான உரிமை வாக்குரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இங்கு ஆளும்கட்சியினர்தான் தீர்மானிக்கின்றனர். இந்த நடவடிக்கையை மறு ஆய்வுசெய்ய வேண்டும். அதிகாரிகள் வீடு வீடாகச் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். பிஎல்ஓக்களை மிரட்டுவதை திமுக, பாஜக கைவிட வேண்டும்.

தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவற்றுக்கு செவி கொடுக்காவிட்டால் போராட்டம் ஓயாது.

ஆதவ் அர்ஜுனா: பெண் என்ற காரணத்துக்காக ஜெயலலிதாவைப் பற்றி மிக அநாகரிகமாக பேசிய கட்சி திமுக. அதனால்தான் அவர்களது அவதூறுகளுக்கு பதில் அளிக்க நமக்கு நேரமில்லை.

எஸ்ஐஆரை கண்டிப்பதாக கூறும் திமுக, சட்டப்பேரவையில் ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை? இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும்.

அப்படி நடத்தாமல் திமுக சார்பில் நடத்தியது ஏன்? இதனால்தான் திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணி என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இங்கு யாரும் கூறவில்லை.

6 மாதங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு செய்திருக்கலாம் என்று தான் கூறுகிறோம். உண்மையான, வெளிப்படையான ஒரு தேர்தல் நடந்தால், 1967 மற்றும்1977-க்கு பிறகு தவெக தலைவர் விஜய் நிச்சயம் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் ஆவார்.

எஸ்ஐஆர் பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை (பிஎல்ஓ) பணி செய்ய விடாமல் ஒரு இடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, திமுகவினர்தான் வீடு வீடாக செல்கின்றனர்.

இதுபோல, எஸ்ஐஆர் பணியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. எங்களிடம் கட்டமைப்பு இல்லை என்கின்றனர். மக்கள்தான் எங்கள் கட்டமைப்பு. இவ்வாறு அவர்கள் பேசினர்.

கோவையில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், மதுரையில் இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார், திருச்சியில் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் உட்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *