சென்னை:
இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத்.
இப்படத்தில் அவருக்கு சம்பளமாக அல்லாமல் இசை உரிமையினை தயாரிப்பாளர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரிமையினை விற்காமல் புதிதாக இசை நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினால் என்ன என்ற ஆலோசனையில் இருக்கிறார் அனிருத்.
இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘அரசன்’ படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் அதிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
மேலும், தனது இசையில் அவ்வப்போது உருவாகும் சிங்கிள் பாடல்களையும் தனது இசை நிறுவனம் மூலமே இனி வெளியிட திட்டமிட்டுள்ளார் அனிருத். இந்த முடிவினால் இசை நிறுவனங்கள் பெரும் ஆச்சரியத்தில் இருக்கின்றன.
ஏனென்றால் சமீபமாக அனிருத் இசையில் உருவாகும் பாடல்கள் தான் இசை நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது.
அவரே இசை நிறுவனம் தொடங்கினால் இனிவரும் படங்களின் உரிமையினை அவரே எடுத்துக் கொள்ளும் சூழல் உருவாகும் என்பது தான் இதற்கு காரணம்.
தனது இசை நிறுவனம் தொடர்பான அறிவிப்பினை நண்பர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் வெளியிடுவார் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.